பெர்ப்ளெக்ஸிட்டி என்பது சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட், க்ரோக் உள்ளிட்ட முன்னணி இயற்றறிவு (GenAI) செயலிகளின் நவீன சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு செயலியாகும். இதில் தேடவோ, படம்/காணொளி உருவாக்கவோ, ஆய்வு செய்யவோ நிரல் எழுதவோ மேலும் பல கணினிப் பணிகளை எளிதில் செய்துகொள்ள முடியும். பேராசிரியரோ, வங்கிப்பணியாளரோ, அரசு ஊழியரோ, மாணவரோ, நிரலாளரோ யாராக இருந்தாலும் உங்களது தினசரி பணிகளை எளிமைப்படுத்தும். நான்கு மணிநேரம் அமர்ந்து தட்டச்சு செய்வதை அரைமணி நேரமாகச் சுருக்கும். ஆறு மணிநேரம் செய்யும் ஆராய்ச்சிகளை ஒரு மணிநேரத்தில் செய்ய உதவும். பொதுவாக எல்லா இயற்றறிவு உரையாடிகளிலும் இதைச் செய்து கொள்ளலாம் என்றாலும் அனைத்தையும் ஒரே இடத்தில் செய்து கொள்வதற்கு இந்த பெர்ப்ளெக்ஸிட்டி உதவுகிறது.
இன்று ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெர்ப்ளெக்ஸிட்டியின் ப்ரோ பாதிப்பை இலவசமாகத் தங்கள் வாடிக்கையாளர்கள் ஓராண்டிற்குப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. பெர்ப்ளெக்ஸிட்டியில் இலவசப் பதிவு, ப்ரோ பதிப்பு, மேக்ஸ் பதிப்பு என்று மூன்று வகை பதிப்புகள் உள்ளன. கட்டணத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வசதி கூடுதலாக இருக்கும். பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ எனப்படும் பதிப்பானது மாதத்திற்கு $20 (சுமார் 1700 ரூபாய்) கட்டணத்தில் உள்ளது. இந்தச் சிறப்பு அறிவிப்பால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவசமாக 17000 மதிப்புள்ள ஓராண்டு சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் மட்டும் போதும், அது முன்பணத் திட்டமோ(prepaid) பின்பணத் திட்டமாகவோ(postpaid) இருக்கலாம். உங்களது ஏர்டெல் தெங்க்ஸ் செயலியில் "rewards & OTTs" பகுதியில் மேலேகண்டவாறு சலுகையைக் காட்டும். அதனைச் சொடுக்கினால் promocode உடன் பெர்ப்ளெக்ஸிட்டி தளத்தில் உங்களைப் பதிவு செய்யச் சொல்லும். அங்கே உங்களது கணக்கில் உள்ள நுழைந்து கொண்டால் இந்த 'ப்ரோ' பதிப்பு செயல்படுத்தப்பட்டிருக்கும்.
பெர்ப்ளெக்ஸிட்டியை இணையத்தில் மட்டுமல்லாமல் மேக், விண்டோஸ், ஆண்டிராய்டு செயலியாகவும் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்1, ஓ3, போன்று முன்னணி நிறுவனங்கள் வெளியிடும் நவீன மாதிரிகளை இவர்களே அவ்வப்போது இதில் இணைத்துவிடுவார்கள் என்பதால் நான் தேடிப் போய்ப் பயன்படுத்த வேண்டியதில்லை. உங்கள் கணினியில் உள்ள ஆவணங்களில் ஏதேனும் தேடவோ வகைப்படுத்தவோ, சுருக்கவோ, விளக்கப்படம் போடவும் முடியும். தமிழ் உட்பட பெரும்பாலான மொழி ஆவணங்களை இது புரிந்து கொள்ளும். நமக்கு எளிதில் புரியாத சட்டம், நவீன அறிவியல், பிறமொழி ஆவணங்களாக இருந்தாலும் படிக்க நேரமில்லாத நாவல்கள், கட்டுரைகள் போன்றவையாக இருந்தாலும் இதற்குக் கொடுத்து அதிலிருந்து கேள்விகளைக் கேட்டுப் படித்துக் கொள்ளலாம். தினசரி பணிகளான திட்ட வரைவு எழுதவோ, கடிதம் எழுதவோ, நழுவு படங்கள் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் சிந்தித்து முடிவெடுக்கத் தேவைப்படும் தரவுகளை இது திரட்டிக் கொடுக்கும். இதே நிறுவனம் காமெட் என்ற புதிய வகை செநு உலாவியை (AI agent Browser) அறிமுகம் செய்துள்ளனர்.(தற்சயம் மெக்ஸ் பதிப்பில் மட்டும் உள்ளது) இதன் மூலம் ஒரு சில பணிகளையும் நமக்காக உலாவியில் இதனால் செய்யமுடியும். உதாரணத்திற்கு இந்தத் தளத்தில் சென்று இந்தத் திரைப்படத்திற்கு எனது நண்பர்களுடன் முன்பதிவினைச் செய் என்று தூண்டில் சொல் கொடுத்தால் அதுவே உங்களது நண்பர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கும் சேர்த்து முன்பதிவு செய்து தகவலும் கொடுத்துவிடுமாம். அடிப்படையில் மெய்நிகர் உதவியாளர் போல நமக்கு உதவும். இந்த அறிவிப்பின் மூலம் ஏர்டெல்லின் 36 கோடி வாடிக்கையாளர்களுக்கும் 12 மாதங்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவாய்ப்புள்ளது. பெர்ப்ளெக்ஸிட்டியின் பயனர்கள் எண்ணிக்கை அதிவிரைவாக உயரக்கூடும். மற்ற செயலிகளைவிட இதன் இந்திய சந்தை மதிப்பு கூடவும் வாய்ப்புள்ளது. இலவச வரையறையற்ற தரவுத் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ போல இதுவும் ஒரு புதிய புரட்சிகரமான திட்டம். ஆனால் சரியாக இத்தகைய இயற்றறிவுக் கருவிகளைப் பயன்படுத்தவும் பாதுகாப்பாகத் தகவல்பரிமாற்றம் செய்யவும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் தரும் மதிமயக்கங்களை(hallucination) அடையாளங் காணவும் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளதா என்பது ஐயமே. ஆனால் இதைக் கற்றுக் கொள்ள வேண்டியது காலத்தில் தேவையாகிறது.
பொதுவாக இந்த வகை செயலிகளின் இலவசப் பதிப்பில் குறையான வசதி கொடுப்பதால் அதன் முழுமையான வீச்சினைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்றும் கற்றுக் கொள்ளலாம். கூகிளில் ஒரு தகவலைத் தேடி எடுக்கத் தெரிவதே ஒரு முக்கிய திறனாக இருந்த காலம் போய் பெர்ப்ளெக்ஸிட்டியில் தேடிப் படிக்கத் தெரிவது அடிப்படைத் திறனாகிவிட்டது.
சில யோசனைகள்:
உங்களது தனிநபர் தகவல்களைப் பகிரும் முன் கவனத்துடன் கையாளுங்கள்.
அதன் பதில்களை அப்படியே நம்பாதீர்கள் (மதிமயக்கங்கள் உண்டு), சுயசரிபார்ப்பினைச் செய்து பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு உரிமையில்லாத பிறர் படங்களையோ, கோப்புகளையோ இதன் மூலம் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
2 comments:
மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி தோழரே!
மிக்க நன்றி.
Post a Comment